. ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்ய ப்ரபந்தம் ஸ்ரீநாதமுனிகளால் ஸ்ரீவைஷ்ணவ ஸமுதாயத்திற்குக் கிடைத்த பிறகு, ஆழ்வார்கள் காட்டியுள்ள வைணவ மரபுகளும், வைணவ பரிபாஷைகளும் கிடைத்து, அவைகளைப் பயன்படுத்துவதால் ஸ்ரீவைணவ உலகத்திற்குத் தனிச் சிறப்பும்,ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தனி மரியாதையும் ஸமுதாயத்தில் ஏற்பட்டன.
ஸ்ரீவைணவ மரபில் பிறந்த ஒவ்வொருவரும் பிற வைணவர்களைப் பார்க்கும்போது 'அடியேன்' என்ற பணிவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு அடிப்படை நம்மாழ்வாரின் நீர் நுமது என்றிவைவேர் முதல் மாய்த்து என்ற திருவாய்மொழியில் பாசுரமாகும். இந்த அநுஷ்டானத்தை நம்மாழ்வார் அடியேன் செய்யும் விண்ணப்பமே என்று காட்டியுள்ளார்.
ஒரு வைணவன் மற்றொரு வைணவனைக் கண்டால் வேரற்ற மரம் போன்று உடல் முழுதும் தரையில் படும்படி விழுந்து வணங்க வேண்டும். இதில் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இல்லை. விழுந்து வணங்குவதை வைணவர் தண்டம் ஸமர்ப்பித்தல் என்பர். அப்படி தண்டம் ஸமர்ப்பிக்கும்போது அடியேன் இராமானுஜ தாஸன் என்றே ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும்.
பகவானிடத்தும் பாகவதர்களான திருமால் அடியார்களிடத்தும் அன்பு பூண்டிருக்க வேண்டும்.
கோயிலுக்குச் சென்றவுடன் தாயாரை (பிராட்டியை) முதலில் ஸேவித்து வணங்ஙி, அதன் பிறகே பெருமாளைச் சேவிக்க வேண்டும்.
ஒரு வைணவர் மற்றொரு வைணவருக்கு கடிதம் எழுதும்போது ஸ்ரீமதே இராமானுஜாய நம: என்றெழுதி அதன் பிறகே அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று எழுத வேண்டும். பிறர் நமக்கு எழுதும் கடிதத்தை ஸ்ரீமுகம் என்றும் நமது கடிதத்தை விண்ணப்பம் என்றும் சொல்ல வேண்டும். அடியேன் விண்ணப்பத்திற்கு ஸ்வாமி பதில் ஸ்ரீமுகம் ஸாதித்து அருளிற்று என்று தெரிவிக்க வேண்டும்.
தன்னுடைய வீட்டை 'அடியேனுடைய குடிசை' என்றும், பிறர் வீட்டை 'ஸ்வாமி திருமாளிகை' என்றும் சொல்ல வேண்டும். பிறரை நம் வீட்டிற்கு அழைக்கும்போது, ஸ்வாமி அடியேன் குடிசைக்கு பொன்னடி சாத்த வேண்டும் என்று கூறுவது மரபு. நாம் அவர் வீட்டுக்குச் செல்வதை அடியேன் தேவரீர் திருமாளிகைக்கு விடை கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும்.
பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது 'ஆமாம்' என்று சொல்வதற்குப் பதிலாக 'அடியேன்'என்றே கூறவேண்டும்.
கோயிலுக்குப் போவதை ஸந்நிதிக்குப் போகிறேன் என்று சொல்ல வேண்டும். அங்கு ஸ்வாமி கும்பிடுவதை பெருமாளை ஸேவித்தேன் என்றுரைக்க வேண்டும். பெருமாளின் காட்சியை 'பெருமாள் ஸேவை போக்யமாக இருந்தது' (இன்பமாக) என்று சொல்ல வேண்டும்.
பெருமாள் உலா வருவதை 'பெருமாள் புறப்பாடு கண்டருளுகிறார்' அல்லது 'திருவீதி எழுந்ருளுகிறார்' என்று சொல்ல வேண்டும்.
பிறரிடம் ' என்ன நினைக்கிறீர்' என்பதை 'ஸ்வாமியின் திருவுள்ளம் என்ன' என்றும், என்ன வேண்டும் என்பதை 'என்ன நியமனம்' என்றும், அதன் பிறகு 'தேவரீர் நியமனத்தை உடனே தலை கட்டுகிறேன்' . இப்பொழுதும் உமக்கு என்ன நினைவு என்பதை 'ஸ்வாமி திருவுள்ளத்தில் என்ன ஓடுகிறது' என்றும் கேட்க வேண்டும்.
பெரியோர்கள் பெருமாள் ஸேவிப்பதை மங்களாசாஸனம் என்றும், ஸ்வாமி பெருமாளை மங்களாசாஸனம் செய்ய வேண்டும் என்றும் சொல்ல வேண்டும்.
தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை 'ஸ்வாமி என்ன ஸாதித்தருள்கிறது' என்றோ, 'தேவரீர் என்ன ஸாதிக்கிறது' என்றோ சொல்ல வேண்டும்.
தண்ணீர், ஜலம், தீர்த்தம் என்ற சொற்களை இடைமறித்து பயன்படுத்த வேண்டும். பெருமாள் திருவாராதனத்திற்கும், தளிகைக்கும் பயன்படுத்துவதை தீர்த்தம் என்றே கூறவேண்டும். தீர்த்தம் என்பது மிகவும் புனிதமானது.
ஸ்நானம் என்பதை நீராட்டம் என்று நாம் நீராடுவதை தீர்த்தமாடுதல் என்று கூறவேண்டும். தீர்த்தம் வைக்கும் சொம்பிலிருந்து நேராக தீர்த்தம் எடுக்காமல் உடன் ராமாநுஜன் என்ற டம்ளர் மூலமே எடுத்துத் தீர்த்தத்தைப் பயன்படுத்த வேண்டும். பெருமாள் ஸந்நிதிக் கதவுகளைத் திறப்பதை திருக்காப்பு நீக்குதல் என்று சொல்ல வேண்டும்.
க்ருஹத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் மரப்பெட்டியை கோயிலாழ்வார் என்று வழங்கவேண்டும். பெருமாளுக்குச் செய்யும் பூஜையைத் திருவாராதனம் என்று சொல்லவேண்டும். திருவாராதனம் நடப்பதை திருவாராதனம் கண்டருளுகிறார் என்றே சொல்ல வேண்டும். பெருமாளுக்கு நிவேதனம் செய்வதை தளிகை கண்டருளப் பண்ணுவது, அமுது செய்விப்பது என்று கூற வேண்டும்.
அன்னத்தை அமுது என்றும், காய்கறியை கரியமுது, சாம்பாரை நெகிழ் அமுது, ரசத்தை சாற்றமுது, பாயஸத்தை திருக்கண்ணமுது, பக்ஷணத்தை திருப்பணியாரம் என்றும் கூறவேண்டும்.
பெருமாளுக்குகந்த துளஸியைத் திருத்துழாய், கோயில் பணியை கைங்கர்யம், வஸ்த்ரத்தைத் திருப்பரிவட்டம் எனவும் சொல்ல வேண்டும்.
திரு என்ற சொல் வைணவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. திருமகள், திருமால், திருமடைப்பள்ளி, திருமேனி ஆகியவை போன்று ஒருவரைக் கண்டவுடன் விஜாரிக்கும்போது 'தேவரீர் திருமேனி பாங்காக எழுந்தருளியிருக்கிறதா' என்று விஜாரிக்க வேண்டும். ஒருவரிடம் பேசும் போது, தேவரீர் திருத்தகப்பனார், திருத்தாயார், திருத்தம்பியார், திருத்தமைக்கையார் என்று கூறவேண்டும். கருவுற்ற பெண்களை திருவயிறு வாய்த்தவள் என்றே சொல்லவேண்டும்.பெருமாளுக்கு நடத்தும் அபிஷேகத்தை திருமஞ்சனம் எனச் சொல்ல வேண்டும்.
அனுமனைத் திருவடி என்றும், கருடாழ்வாரை பெரிய திருவடி என்றும், இராமாநுஜரை எம்பெருமானார் என்றும், மணவாளமாமுநிகளை பெரிய ஜீயர் என்றும், திருக்குளத்தை புஷ்கரணீ என்றும், பெருமாள்/தாயார் பாதுகைகளை ஸ்ரீசடகோபன் என்றும், ஆழ்வார்கள் பாதுகைகளை இராமாநுசன் என்றும், இராமாநுஜர் பாதுகையை முதலியாண்டான் என்றும், மணவாளமாமுநிகள் பாதுகையை பொன்னடியாம் செங்கமலம் என்றும் வழங்கவேண்டும்.
நமது க்ருஹத்திற்கு வநத விருந்தினரை எழுந்தருள்க என்று வரவேற்று, கை, கால் அலம்பத் தீர்த்தம் கொடுக்கும்போது திருவடி சோதித்தருள்க, சாப்பிட அழைக்கும்போது அமுது செய்ய எழுந்தருள வேண்டும் என்றும் ஸ்தல சுத்தி செய்து, இலை தளிகை சேர்த்துள்ளது, ப்ரசாதப்பட வேண்டும் எனவும், அழைத்து தேவரீருக்கு என்ன திருவுள்ளமோ என்று கேட்டு அவர் விரும்பியதை ஸாதித்து அமுது செய்த பிறகு அடைக்காய் அமுது ஸ்வீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
எழுதும் போது ஸ்ரீமதே இராமாநுஜாய நம: என்று ஆரம்பித்து முடிக்கும்போது அடியேன் இராமாநுஜதாஸன் என முடிக்கவேண்டும்.
Source: திரிச்சித்ரகூடம் ஸ்ரீ A.V.ரங்காச்சார்யர் ஸ்வாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக