ஞாயிறு, 30 மார்ச், 2014

நஞ்சீயர் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

The article below originally appeared here:
https://www.facebook.com/murali.battar/posts/654975117889075?stream_ref=5

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

நஞ்சீயர் பற்றிய சில குறிப்புக்கள்:
Nanjeeyar நஞ்சீயர்


அவதாரம் : விஜய வருடம் (1113) பங்குனி உத்திரம்.
இடம் : மேல்நாடு ( திருநாராயணபுரம் ).
பரமபதித்தது :1208ஆம் ஆண்டு.
இடம் : திருவரங்கம்.

இவரது திருநாமங்கள் : ஸ்ரீ மாதவர், மாதவமுனி, மாதவ வேதாந்தி,
மாதவாசார்யர், மாதவசூரி, வேதாந்தி,
வேதாந்த வேதியர், நிகமாந்த யோகி, ஸ்ரீ ரங்கநாதன்.
இவரது ஆசார்யர் : பட்டர்.

இவரது சீடர்கள் : நம்பிள்ளை, ஸ்ரீ சேனாதிபதி சீயர்,
குட்டிக்குறி இளையாழ்வான், வீரப்பிள்ளை,
பாலிகை வாளிப்பிள்ளான், பெற்றி.

இவரது திருவாராதனப் பெருமாள் : ஆயர் தேவு (கண்ணன்).

இவர் அருளிய நூல்கள் : ஈடு ஈராயிரப்படி ( திருப்பாவை வியாக்யானம் ),
ஈடு ஒன்பதாயிரப்படி ( திருவாய்மொழி வியாக்யானம்)
திருப்பல்லாண்டு, திவந்தாதிகள்,கண்ணிநுண் -
-சிறுத்தாம்பு, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான்
ஆகியனவற்றின் வியாக்யானங்கள்,
சரணாகதிகத்யம் வியாக்யானம்,
ஸ்ரீஸுக்தபாஷ்யம்.

உடையவர் பரமபதிக்கும் முன்னர் ஓரிரு நாட்களின் முன்னர் பட்டரை அழைத்து , " மேல் நாட்டில் ( திருநாராயணபுரத்தில் ) ' வேதாந்தி ' என்கிற பெரிய வித்வான் இருப்பதாக அறிந்தோம். அவரை நமது சித்தாந்தத்திற்குத் திருத்திப் பணிகொள்வீராக! " என நியமித்துத் தமது நல்லாசிகளை நல்கினார்.
சிலகாலம் சென்று மேல்நாட்டிலிருந்து திருவரங்கம் வந்த ஒரு அந்தணர் பட்டரின் திருவடி தொழுது , " மேல்நாட்டில் வேதாந்தி என்கிற ஒரு பெரிய வித்வான் இருக்கிறார். அவருடைய வித்தையும் கோஷ்டியும்போல் உமக்கும் இருக்கக் கண்டு களிக்கிறேன் " என்று கூறினார். பின்னர் அவர் மேல்நாடு திரும்பி வேதாந்தியைச் சந்தித்து , " ஸ்வாமி திருவரங்கத்தில் பட்டர் என்று ஒருவர் எழுந்தருளியிருக்கிறார். அவர் ஒரு சிறந்த வித்வான். அவருடைய சீடர் கோஷ்டியும் அதன் பெருமையும் மிகப்பெரிது " என்று சொல்ல, அதற்கு அந்த வேதாந்தி , " அவர் நமக்கு ஒத்த வித்வானோ? அவருக்கு என்னென்ன சாஸ்திரம் வரும்? " எனக்கேட்டார். அதற்கு அந்த அந்தணர், " பட்டர் உம்மிலும் சிறந்த வித்வானே! தர்க்க, வியாகரண, மீமாம்சைகள் முதலிய சகல சாஸ்திரங்களும் அவருக்கு வரும் " என்று கூறினார். அந்த வேதாந்தி அதுகேட்டு, " இவ்வுலகிலே நமக்கு ஒருவரும் எதிரில்லை என்று ஷட்தரிசனத்திற்கும் ஷடாசனமிட்டு அதன்மேலே உயர வீற்றிருந்தோம். பட்டர் என்பவர் நம்மிலும் உயர்ந்தவர் என்று இவர் சொல்கிறாரே " என்று அன்றுமுதல் திடுக்கிட்டிருந்தார்.

அந்த அந்தணர் மீண்டும் ஒருமுறை திருவரங்கம் வந்தபோது பட்டரின் திருவடி தொழுது, " தேவரீருடைய வைபவங்களை எல்லாம் வேதாந்திக்குச் சொன்னேன். தர்க்க, வியாகரண,மீமாம்சாதிகள் ஆகிய சகல சாஸ்திரங்களும் தேவரீருக்கு வருமெனச் சொன்னேன். அதைக்கேட்டு அவர் திடுக்கிட்டுள்ளார் " என்று விண்ணப்பித்தார். அதற்கு பட்டர், " திருநெடுந்தாண்டக சாஸ்திரம் நமக்குத் தெரியும் என்று வேதாந்திகளிடம் சொல்லுங்கள் " என்று அருளிச்செய்ய அவரும்,
" அங்ஙனமே சொல்லுகிறேன் " என்று சொல்லி மேல்நாடு சென்றார்.

அங்கு வேதாந்திகளைக் கண்டு, " பட்டருக்குத் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் அசாதாரணம் " என்று கூற, அதுகேட்ட வேதாந்தி, அந்த சாஸ்திரம் இன்னதென்று அறியப்பெறாததால் அது என்னவோ என்று மிகவும் வியப்படைந்தார்.
இவ்வாறு சிலநாட்கள் சென்றபின்னர், எம்பெருமானார் முன்னர் நியமித்தபடி வேதாந்தியைத் திருத்திப் பணிகொள்ளத் திருஉள்ளம் பற்றிய பட்டர், நம்பெருமாள் நியமனம் பெற்றுப் புறப்பட்டு மேல்நாட்டில் காவிரிக்கரையில் சிறுபுத்தூரில் ஆனந்தாழ்வானைக் கண்டு சேவித்து எம்பெருமானார் நியமித்தருளியபடியே வேதாந்தியைத் திருத்திப் பணிகொள்ள நம்பெருமாளும் நியமித்தருளியதாகக் கூறினார். ஆனந்தாழ்வானும் மிகமகிழ்ந்து பட்டரைத் திருநாராயணபுரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய் திருநாராயணனைச் சேவிக்கச் செய்து பின்னர் வேதாந்திகள் உள்ள ஊருக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு போனார்.

சீடர்கள் பலர் விருதுகள் கூறத் திருப்பல்லக்கில் பட்டர் எழுந்தருளி
இருந்ததைக் கண்ட அங்கிருந்த அந்தணர்கள் சிலர் பட்டரை நோக்கி, " நீவீர் யார்? இங்கே எழுந்தருளியுள்ளதன் நோக்கம் என்ன? " என்று கேட்க அதற்குப் பட்டர்,

" நாம் இராமானுசனடிகள். வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம் " என்றார். அதைக்கேட்ட அவர்கள், "தேவரீர் இப்படிக் கோஷ்டியுடன் எழுந்தருளினால் வேதாந்திகளைக் காண்பது அரிது. அவரது சீடர்கள் தலைவாசலிலே இருந்து வந்த வித்வான்களுடன் நாலாறு மாதம் தர்க்கித்து அவர்களை உள்ளே புகாமல் செய்து விடுகிறார்கள். அவ்வாறு ஆகாமல் அவரை நேரில் கண்டு தர்கிக்க ஒரு வழியைக் கூறுகிறோம் கேளும். வேதாந்திகள் மிகவும் செல்வச் சிறப்புடையவராதலின் தினமும் பிராமணர்களுக்கு அன்னதானம் சிறப்பாக நடத்தி வருகிறார். அங்கு உணவருந்தவரும் பிராமணர்களுடனே கலந்து தேவரீரும் உணவுச் சாலைக்குள் சென்றுவிடுங்கள். அங்கு அவசியம் வேதாந்திகள் வருவார். அப்போது நீவீர் அவரைக் காணலாம். எனவே தேவரீரின் கோஷ்டியை எல்லாம் இங்கேயே நிறுத்திவிட்டுத் தனியே எழுந்தருளுவதே நல்லது " என்று ஆலோசனை கூறினர்.

பட்டரும் அவர்களின் ஆலோசனைப்படியே உணவுச் சாலைக்குள் சென்று பந்தியில் எழுந்தருளாமல் வேதாந்திகள் இன்னார் என்று அறிந்து அவர் பக்கலிலே நிற்க அவரும், " பிள்ளாய்! இங்கு ஏன் நிற்கிறீர்? " என்று கேட்க, " பிட்சைக்காக! " என்று பட்டர் கூற, " எல்லோரும் உணவருந்தும் இடத்திலேபோய் அமரும் " என்றார் வேதாந்திகள். உடனே , " நான் அன்னப்பிட்சைக்கு வரவில்லை " என்று கூற, அதுகேட்ட வேதாந்திகள், இவர் வித்வானாக இருக்கக்கூடும் என்று எண்ணி,
" கா பிட்சை ( என்ன பிட்சை )? " என்று கேட்க, பட்டரும், " தர்க்க பிட்சை " என்றார். அதைக்கேட்டு திடுக்கிட்ட வேதாந்திகள் இவர் நாம் முன்னர் கேள்விப்பட்டிருந்த பட்டராகத்தான் இருக்கவேண்டும் என்று நிச்சயித்து, " நம்மிடம் தர்க்க பிட்சை கேட்டீர். நீர் பட்டரோ? " என்று கேட்டார். பட்டரும், " ஆம்! " என்றார். அவ்வளவில் வேதாந்திகள் அவருடைய வித்யா வைபவம் காண்போம் என்று குதுகலித்துத் தர்க்கிக்கத் தொடங்கினார்.

ஒருவருக்கொருவர் பட்டத்து யானைகள் பொருதுவதுபோல 9 நாட்கள் தர்க்கிக்கப் 10ஆம் நாள் பட்டர் எம்பெருமானாரின் அருளாசியினாலே அத்வைதத்தைக் கண்டித்து, விசிஷ்டாத்வைதத்தை நிலைநிறுத்தி திருநெடுந்தாண்டகத்தின் விழுமிய பொருளையும் மிக அழகாக உபன்யாசித் தருளினார். உடனே வேதாந்திகள் இரு கைகளையும் கூப்பியவாறு எழுந்திருந்து, " உம்மை மனிதரென்று எண்ணியிருந்தேன். உமக்கும் நம்பெருமாளுக்கும் வேறுபாடு இல்லை. உறங்கும் பெருமாள் அவர். உலாவும் பெருமாள் நீர்! " என்று பலவாறு துதித்து பட்டரின் திருவடிகளிலே விழுந்து தொழுது, " அடியேனை அங்கீகரித்தருளவேணும் " என்று பிரார்த்தித்தார்.

பட்டரும் தாம் எழுந்தருளிய காரியம் விரைவில் பலித்தமைக்குத் திருஉள்ளம் உகந்து, வேதாந்திகளுக்குப் பஞ்சஸம்ஸ்காரம் செய்வித்தருளி, அவரை மஹா பாகவதோத்தமர் ஆக்கி, அவருக்கு விசேட கடாட்சம் அருளி, " வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். நாம் உமக்குப் பரக்கச் சொல்ல ஏதுமில்லை. வேதார்த்தங்களிலே தெளிவுபெற்ற நீர் இனி மாயாவாதக் கொள்கைகளை விட்டுவிட்டு அருளிச் செயல்களை ஓதி நம் எம்பெருமானார் தரிசனத்தை நிர்வகித்துப்போம்! " என நியமித்தார்.

பின்னர் திருவரங்கத்தில் திருஅத்யயன உத்ஸவம் தொடங்கவேண்டி யிருந்தமையால் விரைந்து புறப்பட்டு, திருவரங்கம் வந்து சேர்ந்து, மார்கழி அமாவாசையன்று மாலை பெருமாள் முன் பணிந்து நிற்க, பெருமாளும் ஏதுமறியாதவர்போல், " பட்டரே! நீர் சென்ற காரியம் என்னவாயிற்று? " என்று கேட்டருள, பட்டரும், " வேதாந்திகளும் தேவரீருடைய திருவடிகளுக்கு அடியவரானார் " என்று மகிழ்வுடன் விண்ணப்பித்தார். " அவரைத் திருத்திப்பணி கொண்டது எங்கனே? " என்று பெருமாள் கேட்க, பட்டர் உடனே, " இங்கனே காணும்! " என்று சொல்லித் திருநெடுந்தாண்டகத்தைத் திருவோலக்கத்திலே உபன்யாசித்தார். இதனை அடியொற்றியே இன்றைக்கும் திருவரங்கத்தில், திருஅத்யயன உத்ஸவத் தொடக்கத்திற்கு முன்னாள் ' திருநெடுந்தாண்டகத் திருநாள் ' என்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பின்னாளில் சர்வத்தையும் துறந்து சந்யாசியாகிக் காசாய திரிதண்டங்களை ஏற்று மிகவும் அனுட்டானத்துடன் பட்டரைச் சந்திக்க மேல்நாட்டிலிருந்து
( திருநாராயண புரத்திலிருந்து ) திருவரங்கத்திற்கு விரைந்து கொண்டிருந்தார் வேதாந்திகள். அவரை வழியில் சிறுபுத்தூரில் சந்தித்த அனந்தாழ்வான், " இந்த அனுட்டானங்கள் எதற்கு? இப்படிக் காசாயாதிகளைக் கட்டிக்கொண்டு திரிதண்டம் எடுத்துக்கொண்டு போனால்தான் பரமபதத்தில் இடம்தருவேன் என்று சொன்னானா அந்தப் பரமபதநாதன்? வியர்த்தபோது குளித்து, பசித்தபோது புசித்து, பட்டர் திருவடிகளே கதி என்று இருந்தால் உம்மைப் பரமபதத்திலிருந்து தள்ளி விடுவார்களோ? " என்றார். இதன்மூலம் பட்டர் பெருமை புரியும். மேலும்,

" பரமபதம் கிட்ட எந்த யோக்கிதை இல்லை எனிலும், ஒரு வைணவரின் அபிமானமே பரமபதம் பெற்றுத் தரும் " என்ற இராமானுச தரிசனக் கோட்பாட்டைக் குறிப்பால் உணர்த்தும் அனந்தாழ்வான் பெருமையும் புரியும்.
வேதாந்திகளும் ஆனந்தாழ்வானைச் சேவித்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு விரைந்து திருவரங்கம் அடைந்து, பட்டர் திருவடிகளிலே வேரற்ற மரம்போல விழுந்து கிடக்க, பட்டரும் மிகவும் உகந்தருளி, " நம்முடைய சீயர் வந்தார்! " என்று வாரியெடுத்துக் கட்டிக்கொண்டருளி ஒரு கணமும் அவரைப் பிரியாது தம்முடனே வைத்துக்கொண்டு, சகல ரகசிய அர்த்தங்களையும் அவருக்கு உபதேசித்தருள அவரும் " பட்டரையன்றித் தேவுமற்றறியேன் ' என்றிருந்தார். பட்டர் நம்முடைய சீயர் என்றுசொல்லி அணைத்துக்கொண்ட அன்று தொடங்கி வேதாந்திகளுக்கு ' நஞ்சீயர் ' ( நம் சீயர் ) என்றே திருநாமம் வழங்கலாயிற்று.

நஞ்சீயருடைய ஆசார்ய பக்தி எல்லையற்றது. ஒரு கைசிக ஏகாதசியன்று பட்டர் திருவீதி அலங்கரிக்கப் புறப்பட்டபோது நஞ்சீயரும் அவரது பல்லக்கைத் தாங்கும் செயலாகிய ஸ்ரீபாதம் தாங்கப் புக, பட்டரும் அங்குள்ளோரும், " திரிதண்ட சந்யாசியாகிய உமக்கு இது தகாது " என்று ஆட்சேபித்தனர். உடனே நஞ்சீயர்,
" அடியேனுக்கு உறுதுணையாகி அடியேனை ரட்சிக்க வேண்டும் என்னும் மந்திரம் சொல்லி அளிக்கப்பட இந்த முக்கோல் எனக்கு விரோதமாகில் அது எனக்கு வேண்டாம் " என்று தமது திரிதண்டத்தைத் தூரவீசப்போக அனைவரும் அவரது ஆசார்ய பக்தி விசேடத்தைக் கண்டு, வியந்து போற்றினர்.

பட்டர் பரமபதிக்குமுன் தமது அந்தரங்க சீடராகிய நஞ்சீயரை வைணவ தரிசனக் காவலராக்கி, " நீர் ' வேதாந்தி ' என்று பெயர் பெற்றிருப்பது கொண்டோ, எம்மை ஆசார்யராகக் கொண்டிருப்பது கொண்டோ திருப்தி அடையவேண்டாம்.

' எம்பெருமானாரின் திருவடிகளே தஞ்சம் ' என்று இரும் " என்று உபதேசித்தார்.
திருவாய்மொழிக்குப் பட்டர் அருளிய விளக்கங்களைக் கருத்தில்கொண்டு பட்டர் ஆணையின்படி நஞ்சீயர் ஒரு உரை இயற்றி அதனைச் சுவடியில் அழகாக எழுதவல்லார் ஒருவரைத் தேடியபோது நம்பூர் வரதராஜர் என்னும் அருங் குணத்தாரின் முத்துக்கோர்த்த கையெழுத்தைக்கண்டு மகிழ்ந்து அவரைத் தமது சீடராக்கிக் கொண்டார். திருவாய்மொழி உரை ஓருரு அவருக்குக் கற்பித்து, பொறுப்புடன் அதனைப் பிரதி எடுத்திட சுவடிகளை அவரிடம் தந்தார். அச்சுவடி களுடன் திருக்காவிரியைக் கடக்கும்போது எதிர்கொண்ட வெள்ளப்பெருக்கு அச்சுவடிகளை அடித்துச் சென்றுவிட்டது. அதனால் வருந்திய நம்பூர் வரதராஜர் பின்னர் மனம் தேறி, நஞ்சீயர் பக்கலில் தாம் கருத்துடன் கேட்டு மனதில் இருத்திய உரையை நினைவில்கொண்டு எம்பெருமானின் இன்னருளாலே அதனை எழுதி முடித்து தமது ஆசார்யர் நஞ்சீயரிடம் அதனைச் சமர்ப்பித்தார்.

அதனை வாசித்த நஞ்சீயர் தாம் அருளிட்ட உரையோடு அதனில் பெருஞ் சிறப்புடைய சீரிய பொருள்களும் பொதிந்திருக்கக் கண்டு, வியந்து, மகிழ்ந்து, நிகழ்வுகளை அறிந்து, தமது சீடரை ஆரத்தழுவிட்டார். அத்தோடு, " இவர் நம்பிள்ளை! திருக்கலிகன்றி தாசர்! " என்று பலரும் அறிய அவரைப் பாராட்டினார். அன்றுமுதல் நம்பூர் வரதராஜர் ' நம்பிள்ளை ' என்றே உலகத்தோரால் அழைக்கப்பட்டார்.

" ஒருவன் மிகவும் சிரமப்பட்டு மூலிகைகள், வேர்கள் எனப் பலவற்றைப் பலநாள் முயன்று சேகரித்து, இரும்பைபொன்னாக்கும் குளிகை செய்கின்றான். ஆயின் மற்றொருவன் அந்தக் குளிகையைத் தன்வசத்தில் கொண்டோன் எந்தச் சிரமமும் படாது அந்தக்குளிகையல் இரும்பைப் பொன்னாக்குதல்போல சாஸ்திரம் கற்பவனோ நெடுங்காலம் சிரமப்பட்டு அவற்றைக் கற்று அனுட்டிக்க முயல்கிறான். ஆயின் எம்பெருமானையே தம்வசம்கொண்ட அடியார்கள் அனுட்டிப்பவை எல்லாம் சாஸ்திரம் ஆகும்.அவர்தம் திருவாக்கும் சாஸ்திரம் ஆகும் " என்பார் நஞ்சீயர்.
நஞ்சீயர் தமது வாழ்நாட்காலத்தில் நூறுமுறை திருவாய்மொழிக் காலட்சேபம் செய்தார். அதனால் மகிழ்ந்த நம்பிள்ளை தமது ஆசார்யர் நஞ்சீயரைப் போற்றிச் சதாபிசேகம் செய்து உகந்தார்.

ஒருமுறை பிள்ளையாத்தான் எனும் செல்வந்தர் திருவாய்மொழிக்குப் பொருள்கேட்க நஞ்சீயரை அணுகிட்டார். அதற்கு நஞ்சீயர் திருவாய்மொழிப் பொருளுரைக்க நம்பிள்ளை ஏற்றவர் என்றிட்டார். பிள்ளையாத்தான் நம்பிள்ளையை வணங்க விரும்பாததனை நஞ்சீயரிடம் தெரிவிக்க, " விரும்பா விட்டால் வணங்கவேண்டாம்.உமது வணக்கத்தை அவர் எதிர்நோக்கமாட்டார் " என்று அருளி அதனை நம்பிள்ளையிடமும் தெரிவித்தார்.

ஆசார்யரின் குறிப்பறிந்த நம்பிள்ளை அதற்கேற்ப ஆத்தானின் வணக்கத்தை எதிர்பாராது, மாறாக அவரை ஒரு இருக்கையில் அமர்த்தி அவருக்குத் தண்டன் சமர்ப்பித்து தாம் கீழே அமர்ந்து அவருக்குத் திருவாய்மொழிப்பாடம் உரைத்தார். ஒருநாள் ' பயிலும் சுடரொழி மூர்த்தி ' பதிகம் வருகையில் ' பாதம் பணியவல்லாரைப் பணியுமவர் கண்டீர்! ' என்னும் இடம் வந்தபோது பிள்ளையாத்தான் தமது தவறை உணர்ந்து மிகவும் பணிவுடன் நம்பிள்ளையை வணங்கிடமுயல நம்பிள்ளை அதனை ஏற்கவில்லை.

அத்தோடு," எமது ஆசார்யர் உமது வணக்கத்தை எதிர்நோக்காதே திருவாய்மொழிப் பாடம் சொல்ல நியமித்துள்ளார். எனவே ஆசார்யன் வார்த்தையை அடியேன் மீறி நடக்க இயலாது." எனத் தமது நிலையை விளக்கினார். தமது செயலுக்கு மிக வருந்திய ஆத்தான் நஞ்சீயரைப் பணிந்து, " அடியார்க்கு ஆட்படும் பெருமையை உணரா அறியாமையால் தவறிழைத்தேன். இந்தப் பாசுரப்பொருள் அடியேனைத் திருத்தியது. அருள்கூர்ந்து அடியேனின் பணிவான வணக்கங்களை ஏற்றருள நம்பிள்ளைக்குப் பரிந்துரைக்கவேண்டும் " எனக் கண்ணீர் மல்க விண்ணப்பித்தார். நஞ்சீயரும் நம்பிள்ளைக்கு ஆத்தானின் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளப் பரிந்துரைக்க, அவரும் ஆசார்ய நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.

பட்டரின் வழியில் நஞ்சீயர் திருவரங்கப்பணிகளையும் வைணவ சம்பிரதாயப் பணிகளையும் நிர்வகித்து, பட்டரின் புகழோடு சித்தாந்தப் புகழையும் சிறக்கச் செய்திட்டார். ஆழ்வார்களின் அருளிச்செயல் விளக்கங்கள், ஆசார்ய ஸ்லோகார்த்தங்கள் ஆகியனவற்றைத் தமது சீடர்களுக்கு அளித்து தமக்குப் பின்னர் ' நம்பிள்ளை ' யை வைணவ தரிசனக் காவலராக்கினார்.

நஞ்சீயரும் பிற்காலத்தில் தமது சீடரான நம்பிள்ளையிடம், " நீர் 'லோகாசார்யர்' என்று பெயர் பெற்றிருக்கிறீர்! திருவாய்மொழிக்குப் பொருள் கூறுவதில் நிகரற்றவராக இருக்கிறீர்! எனினும் இப்புகழும் பேரும் போதுமா?
' எம்பெருமானாரின் திருவடிகளே வழித்துணை ' என்று இருப்பதே மிக உயர்வு என்று உபதேசித்தார்.

My sincere gratitude to R.V.Swamy

I read a follow up comment to the original post in Facebook posted by A.K.Gopi
"நஞ்சீயர் திருமங்கையாழ்வார் அருளிய திருநெடுந்தாண்டகத்தால் சுவாமி பட்டரால் திருத்திப் பணிகொண்டதைப்போன்று ,அவரின் சரம தசையில் திருமங்கையாழ்வாரின் தூவிரிய மலருழக்கிப் பாசுரத்தை செவிசாற்றியவண்ணமே பரமபதித்தார்.மேலும் நம்பெருமாள் நஞ்ஜீயரின் அந்திம கால விருப்பப்படி தன திருப்பரியட்டங்களை நீக்கி சர்வஸ்வம் தரிசன தானம் தந்தருளினார்."
Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

1 கருத்து: